Wednesday, December 31, 2014

விடையில்லா வினாவோ நீ?


சுழலும் காலச்சக்கரத்தின் நடுவே வளர்ந்து நிற்கிறேன் நான்.14 வருட சிறைச்சாலையில் தொலைத்த என்னை மீட்டெடுத்தது என் கல்லூரிச்சாலை.படித்தது தொழில்நுட்பம் என்றாலும் கற்றது என்னவோ விழித்துக்கொண்டே உறங்கும் கலையைத்தான்.எழுதிய வரிகள் அனைத்தும் ‘Syntax Error !’ ஆக மாறவே,பிழையைத் திருத்தும் ஆர்வக் கோளாறை கைவிடுத்தேன்...கைகோர்த்து நடைபோடும் மனிதரைப் படிக்க ஆரம்பித்தேன்...

“அக்கா” என்றழைத்த தமக்கை கற்பித்தாள் அணைப்பின் அர்த்தத்தை.
Peter” என்று சீண்டிய தோழி கற்பித்தாள் தமிழின் வாசத்தை.
கேள்விக்கு விடையளித்து கேள்வி கேட்கக் கற்பித்தான் தோழன் ஒருவன்.
புரியா தருணத்திலும் புன்னகைக்க படிப்பித்தான் மற்றொருவன்.
எனது வரையறைக்கும் ஒரு விதிவிலக்கு வேண்டும் அல்லவா? இருக்கிறாள் ஒருத்தி...திறந்த புத்தகமாய் இருப்பினும் இவளை படிக்க இயலவில்லை என்னால்.ஒவ்வொரு அணுகுமுறைக்குப் பின்பும் கேள்வி மட்டுமே விடையாய் மிஞ்சுகிறது!என்றாவது விடையளிப்பாய் அல்லவா...விடாமுயற்ச்சியோடு தொகுக்குகிறேன் வினாவினை....

கவிஞனின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் சித்திரத் தாரகையோ நீ?
கள்வரும் காதலரும் மட்டுமே இரசிக்கும் மந்திர மங்கையோ நீ?
இறுதிவரை நிழலாய் வரும் துணையோ நீ?
சிதறிய எண்ணங்களின் புகலிடமோ நீ?
புரியாப் புதிரே!
கதிரவன் கண்ணாமூச்சி ஆடும் நாடக மேடையோ நீ?
இறப்பின் ஒத்திகையான நித்திரையின் முகவரியோ நீ?
கலைந்த கனாவையும் கரையும் கண்ணீரையும் இலக்கணமாய் கொண்டவளே....
என்னுள் கானா அமைதியை உன்னுள் தேடுகிறேன்..
மௌனமே உந்தன் மொழியோடீ?
இரவே.... விடையில்லா வினாவோ நீ??


Thursday, July 10, 2014

என் உயிர் தோழிக்கு....



என் உயிர் தோழிக்கு....
நலம்....நலம் அறிய அவா..
கல்லூரியின் இறுதி நாட்கள்...அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டாலும்,உன்னிடமிருந்து விடைபெற மனம் விரும்பவில்லை.நாம் இருவரும் உயிர் தோழிகள் எனக் கூற இயலாவிட்டாலும்,இதுவரை நான் பயணித்து வந்த பாதையில்,அவ்வப்பொழுது நீயும் ஒட்டிக்கொண்டு வந்ததுண்டு.எதிர்பாரா சமயங்களில் வந்து நின்று,என் காரியங்கள் அனைத்தையும் சொதப்பி,எனது plan கள் அனைத்தையும் தொப்ளான் ஆக்கும் பெருமை உன்னையே சேரும்.அன்று அப்படித்தான்...அரைகுறை தூக்கத்தில் எழுந்து,உப்பில்லாத உப்புமாவுடன் அம்மாவின் திட்டையும் உள்ளடக்கி,ஒருவழியாக பள்ளிக்கு ஆயத்தமாகி நின்றால்.....அந்நேரம் நீ வந்து நின்றாய்!!சீக்கிரம் செல்லமாட்டாயா என்று நான் உன்னை பார்த்து நின்றால்,நீயோ “ஈ” என்று இளித்து,”ஜோ” வென வசன மழை பொழிந்து விட்டு சென்றாய்.உன் வருகையால்,பள்ளிக்கு நேரம் தவறி நான் செல்ல,அன்று கணித வாத்தியாரிடமிருந்து வாய்ப்பாடுடன்,வசைப்பாட்டும் கிடைத்தது எனக்கு.
பள்ளி நாட்களில் தான் இந்தக் கூத்து என்றால்,கல்லூரி நாட்களில் நீ அடித்த கொட்டமோ...அப்பப்பா...என்னவென்று சொல்லுவது...எவர் கண்ணிலும் படாமல் மறைத்து வைத்திருக்கும் ரெக்கார்டு நோட் உன் கையில் கிடைத்தால்...நான் முடிந்தேன்...மாஸ்டர் காபி மாஸ்டரிடம் செல்லுகையில் அங்க அடையாளம் அனைத்தையும் தொலைந்து நிற்பதுதான் மிச்சம்.என்னிடம் தான் இப்படி என்றால்,ஆண் மக்களிடம் நீ அடித்த கொட்டத்தை என்னவென்று கூறுவது...??என்ன மாயமோ! என்ன மந்திரமோ!! உன் அழகில் மயங்காத ஆடவர் யாவரும் உண்டோ??

புலியைப் போல் புல்லட்டில் உறுமிக்கொண்டே வருபவனும்,நீ வரும் சுவடு கண்டால்,பூனைப் போல் பம்மிக்கொண்டே உன்னை ரசித்துச் செல்கிறான்!கால் வழுக்கி சேற்றில் விழுந்தாலும்,உன் விழியில் நனைந்து கொண்டே கால் பந்து விளையாடுவது ஒரு தனி சுகமாம்.....கூறுகிறான் ஒரு மடையன்.என் ரேஞ்சுக்கெல்லாம் அகர்வால்ஸ்தான் என்று பெருமையடித்தவனும்,உன் வருகையை அறிந்தால்,ஆவினில் முதல் ஆளாய் நிற்கிறான்....டீயுடன் அங்கு நின்று உன்னை இரசிக்கும் சுகம் ஓர் அலாதியான இன்பமாம்.


பிதற்றிக்கொண்டிருந்த என் தோழனை முழு நேர கவிஞன் ஆக்கிய பெருமையும் உன்னையே சேரும்.உன்னை வர்ணித்து அவன் எழுதிய மடல்களை எடைக்கு போட்டால்..பெரிதாக ஒன்றும் கிடைக்காவிட்டாலும் பேரிச்சம்பழம் நிச்சயம் கிடைக்கும்.
உன் அருமை பெருமைகளை அலசியபடி,உன் வருகையை எதிர்நோக்கி கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்தேன்.what's upஎன்று what's app இல் ஆவது கேட்களாம் அல்லவா... Facebook-இலும் முகத்தை காட்ட மறுப்பவளை என்னவென்று சொல்லுவது??அழுத்தக்காரி...இந்நாள்..இந்நேரம்..இவ்விடம் வருவேன் என்று கூறினால்தான் என்ன? சரியான அடம் பிடித்த கழுதை..இருக்கட்டும்..இன்று சூரியன் உச்சத்தில் இருப்பதால் நீ வர வாய்பில்லை என்று காலையிலேயே இரமணண் அவர்கள் கூறினார்..அவர் கூற்றை பொய்பிக்கவாவது நீ நிச்சயம் வருவாய்...என் கணிப்பு தவறவில்லை..இதோ நீ வரும் வாசனை வருகிறது...உனக்கென்றே பரிச்சயமான வாசனை.. spinz,set wetஆகியவற்றுள் அடங்காத வாசனை..மிதமான காற்றில் மிருதுவாய் வரும் வாசனை... மண்வாசனை!
மின்னல் கீற்றுடன் ,இடிமுழக்கத்துடன்,மேகம் எனும் தனது ஆசனத்திலிருந்து தரையிறங்குகிறாள் என் தோழி...ம்ம்...கொடுத்துவைத்தவள்.இவள் வருகையை வர்ணித்து வைரமுத்துவும்,இரஹ்மானும் தொடுத்த கவிச்சரங்கள் தான் எத்துணை?? அப்பப்பா...காரணமின்றியா!!
  குழம்பிய மனமும் குழந்தையை போல் மாறுவது இவள் அரவணைப்பில்தான்...
  பிறர் அறியா வண்ணம் கண்ணீரை துடைப்பதும் இவள் நீர்த்துளிகள்தான்..
  இரசனையும் கவிதையும் பிறப்பது இவளிடத்தில்தான்..
  காதலின் நினைவுகள் பதிந்து இருப்பதும் இம்மழை துளியில்தான்...

இத்துணை கவிஞர்கள் உன்னை கவிபாட,என்ன கவி நீ எனக்கு கூறப்போகிறாய்?இதோ..உன்னிடமே கேட்டு விடுகிறேன்..உன்னுடன் நனைந்து கொண்டே உரையாடுவதும் ஓர் தனி சுகம் அல்லவா!!


Friday, April 11, 2014

என் முதற் காதல் மடல்....



நித்தமும் நடனமாடும் நித்திரா தேவி இன்று நுழைய மறுக்கிறாள்,
நினைவுகளில் நீ நர்த்தனமாடுவதால்...
காவியம் படைக்கும் கும்பகர்ணணோ கதவு அருகே காற்று வாங்குகிறான்,
கண் இமைகளால் நீ ஓவியம் புனைவதால்...
பஞ்சனையும் பட்டு மெத்தையும் கோபக் கனலுடன் காத்திருக்கின்றன,
உன் விழியில் நான் உறங்(ரு)குவதால்...
தனிமையை இனிமையாக்கிய நிலாமுற்றமோ இன்று வெறுமையாய் இருக்கிறது,
என் தனித்தன்மையை நீ களவாடியதால்...
குயிலின் கானமும் தோழியின் கதையும் செவியில் ஏறவில்லை,
நீ உதிர்த்த உளறல்கள் ரீங்காரமிடுவதால்....
சுட்டெரிக்கும் சூரியனும் சத்தமிடாது இருக்கிறான்,
உன் அணைப்பில் நான் குளிர் காய்வதால்...
கிறுக்கல்களும் கவிதையாய் மாற,
குறுஞ்செய்தியிலும் வெட்கம் வெளிப்பட,
காரணம் – காதலா ,காதலனா??
ஐயமின்றி பிதற்றல் அனைத்தும் அந்தக் கள்வனால்தான்!!

காதலில் நீர் கண்ணனா இராமனா என்று வினவியபொழுது,
நான் உன்னவன் என்று உணரவைத்தவன்!!
கணிணியும் கணிதமும் எரிச்சலூட்டியபொழுது,
காதற் கடலில் கரைய வைத்தவன்!!
தாயா தாரமா என்று கேட்டபொழுது,
ஆட்டத்தில் நான் இல்லை என்று ஓடியவன்!!
காரிருளா கார்கூந்தலா – உன்னை கவர்ந்தது எது என்று என்றபொழுது,
உன் கண்மை தானடி என்று கண்சிமிட்டியவன்!!
என் தந்தையா தமையனா – உனது எதிரி யார் என்றதற்கு,
உன் நாணமே என்னைச் சிறை செய்யும் எதிரி என்று சூளுரைத்தவன்!!
என் கேள்வியால் என்னையே வாயடைக்கச் செய்தவன்!!

தவறி விழுந்ததை தோழியிடம் கூறியாயிற்று....
தடுமாற்றத்தை தாயிடமும் உரைத்தாயிற்று...
இருப்பினும் அவனிடம் மட்டும் உரைக்க மறுத்தது ஏன்??
எப்படி உரைப்பேன்??
என்னவன் வெறும் காவியக் காதலனாய் கனவில் பவனி வர என்னவென்று உரைப்பேன் அவனிடம்!!

Thursday, April 3, 2014

My encounter with Ghost...

Through the rattling windows and slashing curtains,
Came an eerie sound enough even to shake the mountains;
Memories of vampires and bloodsheds filled my brain,
I kept my fingers crossed ,but in vain;
Mustering courage I approached towards the door,
Wherein I was taken aback by the image of a wild boar;
Slowly I paced my footsteps towards the noise,











And ...Oh MY God!!!! It was just a kittens voice...












Well...this was my first encounter with poem writing too!!

Friday, March 7, 2014

என்றும் போல நாளை ... மற்றொரு நாள்...


“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்ததே!!
உத்திஷ்ட்ட நரசாடூலே கர்த்தவ்யம் தெய்வமாக்னியம்!!”

ஆஹா....என் அலைபேசியின் ஒலிக்கடிகை ஒலிக்கும் முன் தந்தையின் சுப்ரபாதம் தொடங்கியாயிற்று.இனி தாயாரின் அர்ச்சனையிலிருந்து தப்பிக்க,சத்தமில்லாமல் படுக்கையை விட்டு அகன்று பல் துவக்க ஆயத்தமானேன்.ம்ம்....வெள்ளிக்கிழமை....இன்று ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு சென்றுவிட்டால்,பின்வரும் இரண்டு நாட்களில் நன்றாக கும்பகர்ண சேவை செய்யலாம் அல்லவா!!.இந்ந நப்பாசை தோன்றவே வேகவேகமாக அந்நாளின் கடைமைகளுக்கு என்னை ஆயத்தமாக்கிக் கொண்டேன்.ஒரு வழியாக ,கண்ணாடிக்கு முன் ஒப்பனை அலங்காரத்தை முடித்துவிட்டு,இரண்டு தோசைகளை உள்ளடக்கி,தாத்தாவின் அஞ்சரைப் பெட்டியிலிருந்து சில சில்லரைகளை லவட்டிவிட்டு,கல்லூரிக்குப் புறப்பட்டேன்.

காலை நேர பரபரப்பில்,தனியார் பேருந்தின் நெரிசலில்,வானொலியில் புதுப்பாடல்கள் கேட்பது ஒரு தனி சுகம்.அதுவும் அமர ஒரு இருக்கை கிடைத்தால்,கேட்கவும் வேண்டுமா?? அன்று அதுபோல சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து,வானொலியின் சொல்லுக்கு செவி சாய்த்தேன்.வானொலி தொகுப்பாளர் வருகின்ற தேர்தலைப் பற்றி காரசாரமாக பறைசாற்றினார்.பின்பு,நாளைய நாளின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு வினாவை கேட்டுவிட்டு ,
“மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவை இன்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ?? “
என்ற பாடலை ஒலிக்கவிட்டார்.
நாலை காதலர் தினம் அன்றே !! பின் எதற்கு இந்த பாடல் என்று சிந்திக்கும் பொழுதே,அத்தொகுப்பாளர் , ‘என் இனிய தோழியர் அனைவருக்கும் நாளை உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்’ என்று கூறி ,மேலும் இரு பாடல்களை ஒலிக்கவிட்டார்.

ஏன்? மகளிர் தினத்தை முன்னிட்டுத் தான் இப்பாடல்கள் ஒலிக்கப்படவேண்டுமா?? இச்சிந்தையில் கல்லூரிக்குள் செல்லுகையில்,அறிவிப்பு அட்டைவணை என் கவனத்தை ஈர்த்தது.நாளை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ,கல்லூரியில் மதியம் 12 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.எனது கும்பகர்ண சேவைக்கு பங்கம் வந்துவிட்டதே என்று முகம் சுளித்தாளும்,என் உள்ளத்தில் மற்றொரு குமுறல் துளிர்விட்டது.......எதற்காக மகளிருக்கு என்று ஒரு தனி தினம்?? அதுவும் உலகளவில்??சமூகத்தின் ஓர் அங்கமாய்,ஆணிவேராய் நிற்கும் பெண்களுக்கு எதற்காக இந்தத் தனி கவனிப்பு??உலக ஆண்கள் தினத்தை வெறும் ஏழு வருடமாக கொண்டாடும் நாம்,ஏன் உலக பெண்கள் தினத்தை மட்டும் ஏன் 25 வருடமாகக் கொண்டாடுகிறோம்??


அந்நாளிருந்து இந்நாள் வரை,ஒரு பெண்ணின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக சமூகத்தால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.அவளின் செயல்திறன் ஒரு ஆண்மகனின் திறனுக்குக் கீழ் இருந்தாள்,”பரவாயில்லை....அவள் ஒரு பெண்தானே!! இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்?? “ என்று ஏளனமாகச் சிரிக்கின்றனர்.அவள் நியாயமாக சேய்ய வேண்டிய செயலைச் செய்தால்,இச்சமுதாயம் அவளை வீணாக வியந்து பார்க்கிறது.சமூகத்தின் ஒரு தூணாய் நிற்கும் ஒரு பாலினத்திற்கு இந்தத் தனி கவனிப்பும் சலுகைகளும் தேவையா??சலுகைகள் கொடுத்து முன்னேற்றப்படுவதற்கு அவள் எந்த வகையில் பின் தங்கிவிட்டாள், என் தோழர்களே??பேருந்துகளில் எதற்காக “பெண்கள் “ என்று ஒரு தனி அறிவிப்பு பலகை வேண்டும்?இரயிலில் கூட பெண்களுக்கு ஏதற்காக தனி ஒதுக்கீடு வேண்டும்?? பாராளுமன்றத்தில் வெறும் 33% தான் பெண்களுக்கு என்று வரையறுக்க தாங்கள் யார்?பெண்னை விட ஆணை ஏன் நம் சமுதாயம் உயர்த்தியே வைக்கிறது?பாலியல் தொழில் செய்யும் பெண்களை ஒதுக்கி வைக்கும் இச்சமூகம்,அந்நிலைக்கு காரண கர்த்தாவாக இருக்கும் ஆணை ஏன் கேள்வி கேட்க மறுக்கிறது??ஏன்...கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா??ஆண் மக்களுக்கு கற்பு நெறியை எடுத்துரைக்க ஏன் இச்சமூதாயம் மறுக்கிறது??


  சரி!! ‘நாங்கள் பெண்களை தாழ்மையாக கருதவில்லை...மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!! என்ற வரையறையில் நாங்கள் உங்களை கருதுகிறோம் ‘ என்று ஆண் மக்கள் கூறினாள் ,அதுவும் இத்தேதியில் ஏளனமாகத்தான் தோன்றுகிறது.பெண்களின் குணங்களை பறைசாற்றும் விதமாக நம் நாட்டு நதிகளுக்கெல்லாம் கங்கை,யமுனை,காவேரி என்று பெயரிட்டனர்.ஆனால் அக்காலம் மலையேறிவிட்டது.பண்பாடும் பொறுமையும்,வேகமும் விவேகமும் இக்காலத்தில் எத்துணை பெண்களிடம் இருக்கிறது??அவ்வுளவு ஏன்...பெண்களை பெண்கள் மதிக்கின்றனரா?? இல்லையே!! சமூகத்தை இயக்க வேண்டிய ஒரு பெண்,இன்று இழிவுப்பட்டல்லவா இருக்கிறாள்!!

வழக்கம் போல இவ்வெண்ண்ங்களை என்னுள்ளே புதைத்தவாறு மாலை வீடு வந்து சேர்ந்தேன்.தொலைக்காட்சியை உயிர்பித்தால் “இந்த்ப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா... “ என்ற பாடல் ஒளித்தது.மிகுந்த எரிச்சலுற்று.........................................வேறு என்ன செய்வேன்??அம்மாவின் கண்களில் படாமல்,”என்” சேவையை செய்யச் சென்றேன்!!!!