Friday, April 11, 2014

என் முதற் காதல் மடல்....



நித்தமும் நடனமாடும் நித்திரா தேவி இன்று நுழைய மறுக்கிறாள்,
நினைவுகளில் நீ நர்த்தனமாடுவதால்...
காவியம் படைக்கும் கும்பகர்ணணோ கதவு அருகே காற்று வாங்குகிறான்,
கண் இமைகளால் நீ ஓவியம் புனைவதால்...
பஞ்சனையும் பட்டு மெத்தையும் கோபக் கனலுடன் காத்திருக்கின்றன,
உன் விழியில் நான் உறங்(ரு)குவதால்...
தனிமையை இனிமையாக்கிய நிலாமுற்றமோ இன்று வெறுமையாய் இருக்கிறது,
என் தனித்தன்மையை நீ களவாடியதால்...
குயிலின் கானமும் தோழியின் கதையும் செவியில் ஏறவில்லை,
நீ உதிர்த்த உளறல்கள் ரீங்காரமிடுவதால்....
சுட்டெரிக்கும் சூரியனும் சத்தமிடாது இருக்கிறான்,
உன் அணைப்பில் நான் குளிர் காய்வதால்...
கிறுக்கல்களும் கவிதையாய் மாற,
குறுஞ்செய்தியிலும் வெட்கம் வெளிப்பட,
காரணம் – காதலா ,காதலனா??
ஐயமின்றி பிதற்றல் அனைத்தும் அந்தக் கள்வனால்தான்!!

காதலில் நீர் கண்ணனா இராமனா என்று வினவியபொழுது,
நான் உன்னவன் என்று உணரவைத்தவன்!!
கணிணியும் கணிதமும் எரிச்சலூட்டியபொழுது,
காதற் கடலில் கரைய வைத்தவன்!!
தாயா தாரமா என்று கேட்டபொழுது,
ஆட்டத்தில் நான் இல்லை என்று ஓடியவன்!!
காரிருளா கார்கூந்தலா – உன்னை கவர்ந்தது எது என்று என்றபொழுது,
உன் கண்மை தானடி என்று கண்சிமிட்டியவன்!!
என் தந்தையா தமையனா – உனது எதிரி யார் என்றதற்கு,
உன் நாணமே என்னைச் சிறை செய்யும் எதிரி என்று சூளுரைத்தவன்!!
என் கேள்வியால் என்னையே வாயடைக்கச் செய்தவன்!!

தவறி விழுந்ததை தோழியிடம் கூறியாயிற்று....
தடுமாற்றத்தை தாயிடமும் உரைத்தாயிற்று...
இருப்பினும் அவனிடம் மட்டும் உரைக்க மறுத்தது ஏன்??
எப்படி உரைப்பேன்??
என்னவன் வெறும் காவியக் காதலனாய் கனவில் பவனி வர என்னவென்று உரைப்பேன் அவனிடம்!!

3 comments:

  1. Kadhal madal, kavidhaiyai marum bodhu kadhal, than unmayai izhakiradhu! Nam kan mun oodagangalal niruthappatta kadhaluku nalla sandru...

    ReplyDelete
  2. 'நானும் காதல் பத்தி எழுதிப் பாக்கணும்' என்ற ஆவல் ?

    ReplyDelete