Thursday, July 10, 2014

என் உயிர் தோழிக்கு....



என் உயிர் தோழிக்கு....
நலம்....நலம் அறிய அவா..
கல்லூரியின் இறுதி நாட்கள்...அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டாலும்,உன்னிடமிருந்து விடைபெற மனம் விரும்பவில்லை.நாம் இருவரும் உயிர் தோழிகள் எனக் கூற இயலாவிட்டாலும்,இதுவரை நான் பயணித்து வந்த பாதையில்,அவ்வப்பொழுது நீயும் ஒட்டிக்கொண்டு வந்ததுண்டு.எதிர்பாரா சமயங்களில் வந்து நின்று,என் காரியங்கள் அனைத்தையும் சொதப்பி,எனது plan கள் அனைத்தையும் தொப்ளான் ஆக்கும் பெருமை உன்னையே சேரும்.அன்று அப்படித்தான்...அரைகுறை தூக்கத்தில் எழுந்து,உப்பில்லாத உப்புமாவுடன் அம்மாவின் திட்டையும் உள்ளடக்கி,ஒருவழியாக பள்ளிக்கு ஆயத்தமாகி நின்றால்.....அந்நேரம் நீ வந்து நின்றாய்!!சீக்கிரம் செல்லமாட்டாயா என்று நான் உன்னை பார்த்து நின்றால்,நீயோ “ஈ” என்று இளித்து,”ஜோ” வென வசன மழை பொழிந்து விட்டு சென்றாய்.உன் வருகையால்,பள்ளிக்கு நேரம் தவறி நான் செல்ல,அன்று கணித வாத்தியாரிடமிருந்து வாய்ப்பாடுடன்,வசைப்பாட்டும் கிடைத்தது எனக்கு.
பள்ளி நாட்களில் தான் இந்தக் கூத்து என்றால்,கல்லூரி நாட்களில் நீ அடித்த கொட்டமோ...அப்பப்பா...என்னவென்று சொல்லுவது...எவர் கண்ணிலும் படாமல் மறைத்து வைத்திருக்கும் ரெக்கார்டு நோட் உன் கையில் கிடைத்தால்...நான் முடிந்தேன்...மாஸ்டர் காபி மாஸ்டரிடம் செல்லுகையில் அங்க அடையாளம் அனைத்தையும் தொலைந்து நிற்பதுதான் மிச்சம்.என்னிடம் தான் இப்படி என்றால்,ஆண் மக்களிடம் நீ அடித்த கொட்டத்தை என்னவென்று கூறுவது...??என்ன மாயமோ! என்ன மந்திரமோ!! உன் அழகில் மயங்காத ஆடவர் யாவரும் உண்டோ??

புலியைப் போல் புல்லட்டில் உறுமிக்கொண்டே வருபவனும்,நீ வரும் சுவடு கண்டால்,பூனைப் போல் பம்மிக்கொண்டே உன்னை ரசித்துச் செல்கிறான்!கால் வழுக்கி சேற்றில் விழுந்தாலும்,உன் விழியில் நனைந்து கொண்டே கால் பந்து விளையாடுவது ஒரு தனி சுகமாம்.....கூறுகிறான் ஒரு மடையன்.என் ரேஞ்சுக்கெல்லாம் அகர்வால்ஸ்தான் என்று பெருமையடித்தவனும்,உன் வருகையை அறிந்தால்,ஆவினில் முதல் ஆளாய் நிற்கிறான்....டீயுடன் அங்கு நின்று உன்னை இரசிக்கும் சுகம் ஓர் அலாதியான இன்பமாம்.


பிதற்றிக்கொண்டிருந்த என் தோழனை முழு நேர கவிஞன் ஆக்கிய பெருமையும் உன்னையே சேரும்.உன்னை வர்ணித்து அவன் எழுதிய மடல்களை எடைக்கு போட்டால்..பெரிதாக ஒன்றும் கிடைக்காவிட்டாலும் பேரிச்சம்பழம் நிச்சயம் கிடைக்கும்.
உன் அருமை பெருமைகளை அலசியபடி,உன் வருகையை எதிர்நோக்கி கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்தேன்.what's upஎன்று what's app இல் ஆவது கேட்களாம் அல்லவா... Facebook-இலும் முகத்தை காட்ட மறுப்பவளை என்னவென்று சொல்லுவது??அழுத்தக்காரி...இந்நாள்..இந்நேரம்..இவ்விடம் வருவேன் என்று கூறினால்தான் என்ன? சரியான அடம் பிடித்த கழுதை..இருக்கட்டும்..இன்று சூரியன் உச்சத்தில் இருப்பதால் நீ வர வாய்பில்லை என்று காலையிலேயே இரமணண் அவர்கள் கூறினார்..அவர் கூற்றை பொய்பிக்கவாவது நீ நிச்சயம் வருவாய்...என் கணிப்பு தவறவில்லை..இதோ நீ வரும் வாசனை வருகிறது...உனக்கென்றே பரிச்சயமான வாசனை.. spinz,set wetஆகியவற்றுள் அடங்காத வாசனை..மிதமான காற்றில் மிருதுவாய் வரும் வாசனை... மண்வாசனை!
மின்னல் கீற்றுடன் ,இடிமுழக்கத்துடன்,மேகம் எனும் தனது ஆசனத்திலிருந்து தரையிறங்குகிறாள் என் தோழி...ம்ம்...கொடுத்துவைத்தவள்.இவள் வருகையை வர்ணித்து வைரமுத்துவும்,இரஹ்மானும் தொடுத்த கவிச்சரங்கள் தான் எத்துணை?? அப்பப்பா...காரணமின்றியா!!
  குழம்பிய மனமும் குழந்தையை போல் மாறுவது இவள் அரவணைப்பில்தான்...
  பிறர் அறியா வண்ணம் கண்ணீரை துடைப்பதும் இவள் நீர்த்துளிகள்தான்..
  இரசனையும் கவிதையும் பிறப்பது இவளிடத்தில்தான்..
  காதலின் நினைவுகள் பதிந்து இருப்பதும் இம்மழை துளியில்தான்...

இத்துணை கவிஞர்கள் உன்னை கவிபாட,என்ன கவி நீ எனக்கு கூறப்போகிறாய்?இதோ..உன்னிடமே கேட்டு விடுகிறேன்..உன்னுடன் நனைந்து கொண்டே உரையாடுவதும் ஓர் தனி சுகம் அல்லவா!!


5 comments:

  1. வெயிலின் சுத்தத்தை ஸ்பரிசிப்பவன் நான்! மழை என்பது என் இயக்கத்தின் முடக்கம்!
    "நிற்க! இரசிக்க! செல்க!"

    ReplyDelete
    Replies
    1. "நிற்க! இரசிக்க! செல்க!"

      அதே தான்.

      Delete
  2. ##Facebook-இலும் முகத்தை காட்ட மறுப்பவளை என்னவென்று சொல்லுவது??அழுத்தக்காரி
    #குழம்பிய மனமும் குழந்தையை போல் மாறுவது இவள் அரவணைப்பில்தான்
    #காதலின் நினைவுகள் பதிந்து இருப்பதும் இம்மழை துளியில்தான்

    நனைய மறுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. அருமை..உணர்ச்சிப்பூர்வமான கவிதை ..தங்கள் படைப்புகளுள் சிறந்தது இதுவே..

    ReplyDelete